Thursday, February 19, 2015

இரண்டாம் பருவம்- இரண்டாம் சுழற்சித் தேர்வு (II CYCLE TEST)

சிறுபாணாற்றுப்படை
    பாண்டிய நாட்டின் பெருமை
தேனைச் சொரியும் பூக்களையும், மென்மையும் பக்குவமுமான தன்மையையும் பெற்றுள்ள நுணா மரத்திலிருந்து வெட்டப்பட்ட சிறிய மரத் துண்டுகளில், கூரிய இரும்பு உளிகொண்டு, திருத்தமுறச் செதுக்கிச் செய்திருக்கின்ற அணிகலனை அணிந்த மார்பினை உடையவர், உமணர் (உப்பு வணிகர்). அவர் வயலில் விளைந்த பூவினால் கோர்க்கப்பட்ட கண்ணி எனும் மாலையினை காதுவரை அணிந்தவர். இத்தகு உப்பு வணிகரின் பெரிய எருதுகளைப் பூட்டி இழுக்கின்ற வண்டியோடு வந்த, முதுகுப் பகுதியை மறைக்கும், கோதி ஒழுங்கு செய்யப்பட்டு, ஐந்து பிரிவாக அமைந்துள்ள கூந்தலையும் துன்புறும் இடையினையும் உடையவள் உப்பு வாணிச்சி (உப்பு வணிகரின் துணைவி). அவளின்  அணிகலன்கள் அணிந்துள்ள புதல்வரொடு, உப்பு வாணிகரின் மகளைப் போன்ற குரங்கு, பெண்களின் பற்களைப் போன்றிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களை, வாள்போலும் வாயினை உடைய கிளிஞ்சலின் வயிற்றில் வைத்துமூடி, கிலுகிலுப்பை விளையாடும்.
அலைகடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில் வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தனதாக்கி முத்துமாலை சூட்டப்பெற்ற வெண்கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும் அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப்படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின், தமிழ்மொழி நிலைபெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும்.

மதுரைக் காஞ்சி
மனம் கலந்தவர்கள் அனைவரும் மகிழும்படி பொருள் பல கொடுத்து, எதிர்த்துப் போர் செய்பவர்களின் வீரம் கெடுமாறு செய்து, வாளை சுழற்றிப் போரிடும் வீரர்களை வாழ்த்தியும், அவ்வீரர்களை புகழ்ந்து பாடக்கூடிய பாணர்கள் காலைப்பொழுதே அவர்களைப் புகழ்ந்து பாடுவர். அவர்களுக்கு தேரொடு குதிரையும் சேர்த்துக் கொடுத்து, வாகைப் பூவைச் சூடியும், உதிரக்கூடிய சந்தனத்தை புசிக்கொண்டு இருக்கும் படைத்தலைவர்களைச் சுற்றமாகக் கொண்டவன். பசுமையான கலத்தில் பலகள்ளினை உண்டு மகிழ்ந்தனர்.
பணிந்த நாட்டினைத் தம் நாட்டின் வழி நடக்கசெய்தும், பணியாத நாட்டின் மீது போர்த்தொடுத்து அவர்களை அடக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்றனர். பருந்து பறக்க இயலாத அளவிற்கு அரண்களை அமைக்கின்ரான். படுகண் முரசு காலையில் ஒலிக்க, எந்த நிலம் வேண்டுமோ அந்நிலத்தின் மீது போர் தொடுத்து வெற்றிபெறும் ஆற்றல் வாய்ந்த வேல் கொண்ட மன்னர் பலநூறு பேர் உள்ளனர்.
இம்மன்னர்களின் எண்ணிக்கை கரையில் வந்து குவியும் மணலினும் பலராவர். அவர்கள் யார் என்றால் தம்புகழ் பரவுமாறு அகன்ற உலகத்தை ஆண்டு மக்களுக்குரிய மன உணர்வு இல்லாமையால் பிறப்பை போக்கமுயலாமல் பயன் ஏதுமின்றி இறந்தவராவர். 

திருக்குறள் - புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
பெண் விரும்பியே! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ‘நீடுவாழ்க’ என வாழ்த்துவேன் என்று நினைத்து.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

நாலடியார் - மேன்மக்கள்
அழகிய இடத்தினையுடைய வானத்தில் விரிந்த நிலவினைப் பரப்பும் சந்திரனும் மேன்மக்களும் பெரும்பாலும் தம்முள் ஒப்பாவார். ஆனால், திங்கள் தன்னிடமுள்ள களங்கத்தைப் பொறுத்துக்கொள்ளும்; மேன்மக்களோ அதனைப் பொறார். அவர்கள் தமது ஒழுக்கத்தில் ஒரு சிறிது தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.
கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நொய்யுமாறு ஆலையிலிட்டுச் சிதைத்தும், உரலில் இட்டு இடித்து அதன் சாற்றைக் கொண்டாலும், அச்சாறு, இனிய சுவையுள்ளதாகவே இருக்கும். அதுபோல, மேன் மக்களின் மனம் புண்ணாகுமாறு பிறர் எவ்வளவு தான் இகழ்ந்துரைத்தாலும் அம் மேன்மக்கள் தம் வாயால் தீயன சொல்லார்.
குற்றமற்ற அறிவுடைய மேலோர் திருடார்; கள் அருந்தார்; விலக்கத்தக்க தீயனவற்றை விலக்கித் தூயராகி விளங்குவர்; பிறரை அவமதித்து இகழ்ந்து உரையார்; மறந்தும் தம் வாயால் பொய் கூறார். ஊழ் வினையால் வறுமையுற்றாலும் அதற்காக வருந்தவும் மாட்டார்.

நற்பண்பு இல்லாத கீழ் மக்கள் தம்மிடம், ஒருவர் பல நாட்கள் வந்து கொண்டிருந்தால், (இவர் எதையோ விரும்பி இங்கு வருகிறார்) என்று கருதி அவரை அவமதிப்பர். ஆனால் நற்குணம் நிறைந்த மேன் மக்களோ தம்மிடம் வருபவர் எதையாவது விரும்பினாலும் 'நல்லது' என்று கூறி மகிழ்ந்து நாள் தோறும் அவர்க்கு நன்மையே செய்வர்.


‘இவர் செல்வம் உடையவர்' என்று மதித்து, கீழ் மக்கள் பின்சென்று அவர் தருவன பெற்று வயிறு வளர்ப்பர் பெரும்பாலோர், அவர்களுக்கு நற்குணம் மிக்க மேன்மக்களின் தொடர்பு கிடைக்குமானால் பொருள் நிறைந்த ஒரு சுரங்கமே கிடைத்தது போல் இருக்குமல்லவா?.


No comments:

Post a Comment